அவரத்தரின் கவிதைகள்
கூத்தாநல்லூர் அவரத்தர் சிராஜ் மைதீன்
Tuesday, 16 September 2025
கூத்தாநல்லூரின் FOOTBALL LEGEND H.R. NOOR MOHAMED..
Thursday, 31 July 2025
YOUNG BLOOD & KC நண்பர்களுக்கு வாழ்த்துகள்..!
கைப்பேசியில் தொலைந்த
நவீன யுக காளைகளை,தடை
மீறித் தடுமாறும் யுவன்களை..
சகவாச சேர்க்கையால்
சுகவாசம் தேடி,போதையில்
சிக்கிய பதின்ம வயதினரை..,
மடை மாற்றி,உரமேற்றி,
உணர்வூட்டி, தடம் காட்டும்
கருவியே விளையாட்டு...
தொ(ல்)லைக்காட்சியும்
திறன்பேசிகளும் இல்லா
எங்கள் பள்ளிப்பருவத்தில்
(70 களில்) எங்களது ஒரே
சரணாலயம் அல்லிக்கேணி
விளையாட்டுத் திடலே.
கோடை விடுமுறையில்
தென்னிந்திய எழுவர்
கால்பந்து தொடர் போட்டி..
அல்லிக்கேணி திடல் தான்
எங்களது ஜாகையானது..
கே.சி கிளப்பும்
ஹண்டர்சும்
எங்களை ஆட்டுவிக்கும்
மந்திரச் சொல்லானது..
மந்திரக்கோலை கையில்
வைத்து,எங்களை மதி
மயக்கிய மந்திரவாதிகள்
HR நூர்,ரபியுதீன்,நிஜாம்,
யாசீன் சார் போன்ற
மதிப்புமிகு ஜாம்பவான்கள்..
தொலைக்காட்சி மோகத்தால்
கிரிக்கெட்டின் வேகத்தால்
கால்பந்து மீதான தாகம்
குறையவில்லை நமதூரில்..
காரணம்..மேற்சொன்ன
அண்ணன்மார்களே. நன்றி
சொல்வோம் அவர்களுக்கு..
அந்த ஜாம்பவான்கள்
வழி நின்று,YOUNG BLOOD
& KC நண்பர்கள்,பத்து
ஆண்டுகளுக்கு பின்,கால்
பந்து ரசிகர்களுக்கு,புது
ரத்தம் புகுத்தி இன்று
புத்துணர்வு தந்துள்ளனர்.
நன்றி கலந்த பராட்டுக்கள்..
நாளெல்லாம் பிரச்சனை
தோல்வியுற்றோரின்
அர்ச்சனை.. ஆனாலும்
துவளாமல், பிறழாமல்
AL NOOR TROPHY
போட்டியினை
திறன்பட நடத்திய
உங்களுக்கு வாழ்த்துகள்..
விளையாட்டுத் திடலை
சமன்படுத்தி, சீர்ப்படுத்தி,
இளைஞர்களை ஓரணியில்
நேர்படுத்தி,பந்தயத்தை
ஊர் அறிய,உலகறிய
நடத்திய நண்பர்களே..
கால்பந்து ரசிகர்கள்
உங்களைப் போற்றிப்
புகழ்வார்கள்..
உங்கள் சேவை ஆண்டு
தோறும் தொடரட்டும்..
Friday, 20 June 2025
குருதி கொடை தரும் வள்ளல்கள்
ரத்தம் சிந்தி தன்
குடும்பத்தை காப்போர்
பலர் உண்டு..
ரத்தம் தந்து அறியா
ஒருவரின் உயிர்
காப்பவர்களும் உண்டு..
பரிச்சயம் இல்லா யாரோ,
நலனில்லை என்றவுடன்
பலனில்லை தனக்கு
என்றாலும் குருதி
கொடுக்கும் கொடையாளர்கள்..
யார் இந்த தேவதைகள்??
யார் இந்த மகாத்மாக்கள்??
அன்பபே இவர்கள் மதம்..
கருணையே இவர்கள் ஜாதி..
இரக்கமே இவர்கள் குணம்..
சமத்துவமே இவர்கள் வழி.
ரத்த தானம் செய்ய
இந்த வள்ளல்கள்
சாயும் போது ஒரு
குடும்பம் உயர்கிறது..
இந்த மனித நேய
மாண்பாளர்களை..
முகம் அறியா
அன்பாளர்களை..
சுயநலமற்ற இத்தகு
தன்னார்வலர்களை
போற்றிடுவோம்..
Sunday, 19 January 2025
Wednesday, 22 May 2024
காக்கை சிறகினிலே நந்தலாலா'
மகாகவி பாரதி 'காக்கை
சிறகினிலே நந்தலாலா'
என்று கவி பாடினார் அன்று
நமதூரின் உண்ட லாலா
அனைத்தையும் கண்ட லாலா
ஊராரின் ஒரு சாரரை
காக்கையோடு ஒப்பிட்டு
ஆணவத்தில் பாடுகிறார்..
இல்லை இல்லை சாடுகிறார்..
பறவைகளில் ஒழுக்கமான
காகம்,பேறு கால குயிலுக்கு
கூடு தருமாம்,அதன் குஞ்சுக்கு
கரிசனமாய் உணவு தருமாம்..
உணவினை தன் இனத்தோடு
கூடி உண்ணும் சுபாவம் கொண்ட
காக்கைக்கு சுயநலமில்லை..
அதிகார மமதை இல்லை...
ஆணவத்திமிர் இல்லை..
நல்ல பண்புகளை சொல்லித்
தரும் காக்கையின் பெயரை
கெடுப்பதே பதவிக்கு
காக்காய் பிடிக்கும் கும்பலே..
எதையோ பகிர்ந்துண்ண
எத்தனித்தோர்,பகிர்ந்துண்ணும்
குணமுள்ள காக்கையை ஏனோ
கைத்தட்டி விரட்டுவார்களாம்..
காக்கைகள் கரைந்து ஊர்
கூட்டினால்,அவர்கள் கண்கள்
கரையும் கணங்கள் வரலாம்..
காக்கைகள் கரைந்தால்
விருந்தினர் வருவர் என்பது
தமிழ் மக்களின் நம்பிக்கை...
இங்கு காக்கைகள்
கரைவதால் வாரிய
விருந்தினர் வருவார்களோ..??
அதனால் தான் காகங்கள்
மேல் காழ்ப்புணர்ச்சியோ.?
ஊர் உறவின் முறை
ஜமாத் பெருமை மீட்பு குழு.
Sunday, 19 May 2024
Good Morning
காலை good morning
என்று சொல்லி நண்பர்
அனுப்பிய செய்தியை
சிறிய மாற்றத்தோடு
பதிவிடுகிறேன்...
வீடு பெரிதானாலும்
கதவு சிறிது தான்..
கதவு பெரிதானாலும்
பூட்டு சிறிது தான்..
பூட்டு பெரிதானாலும்
சாவி சிறிது தான்..
அளவில் சிறிய சாவி
பெரும் வீட்டை திறக்கும்..
போலவே பிரச்னை
பெரிதானாலும் சிறு
மாற்றமே தீர்வை தரும்..
அது மன மாற்றமா, இல்லை
இட மாற்றமா, இல்லை
நிலை மாற்றமா என்பது
பிரச்சனையை பொறுத்தது..
சாவி இல்லா பூட்டை
மனிதன் படைப்பதில்லை
தீர்வு இல்லா பிரச்னையும்
உலகில் எங்கும் இல்லை..
பூட்டை மாற்றுவது தீர்வல்ல
தீர்மானத்தோடு நிரந்தர
தீர்வை தேடுங்கள்..
பூட்டு சாவி என்றவுடன்
பள்ளி நிர்வாகம் உங்கள்
நினைவில் நிழலாடினால்
நான் பொறுப்பல்ல..
பொதுவான செய்தியை
பதிவிட்டுள்ளேன்..நன்றி
இன்றைய நாள் நல்ல
நாளாக அமையட்டும்..
Friday, 17 May 2024
கையில் பிரம்போடு உலா வருபவர் நீதி கேட்கிறார்.
கையில் சிலம்போடு
நீதி கேட்ட கண்ணகியைப்
போல,கையில் பிரம்போடு
உலா வருபவர் நீதி கேட்கிறார்..
அவரை முன்னாள் என்பதா?
இல்லை இன்னாள் என்பதா?
குழம்பிய நிலையில் பலர்..
குழம்பிய குட்டையில் மீன்
பிடித்து ருசி பார்க்கும் சிலர்..
புலால் உண்ணிகளால்
பயமில்லை.. ரத்தம்
குடிக்கும் ஒட்டுண்ணிகள்
தான் அச்சம் தருபவை..
நீக்கம் செல்லுமா என்று
மனம் 'ஆறாமல்' காய்
நகர்த்தும் அன்பர்களே..
அலுவலக திறவுகோலை
மாற்றி 'எட்டு' திக்கும்
பறைசாற்றிய நண்பர்களே..
நட்பிற்கான திறவுகோல்
அன்பினை கையில் எடுங்கள்..
போட்டிகளை கைவிடுங்கள்..
நான் என்பது அகம்பாவம்
அதுவே பெரும் பாவம்..
நாம் என்றால் பலம் கூடும்..
அமானிதமாய் வந்த பதவியின்
எஞ்சிய காலத்தை சச்சரவு
இன்றி கடந்தால்,மக்கள்
மன்றம் உங்களை மன்னிக்கும்..
இல்லையெனில் மாற்றம்
குறித்து அது சிந்திக்கும்..
பதவி தரும் போதையில்
நம்மை கேள்வி கேட்க
யாருமில்லை என்ற
மமதையில் உலா
வருவோரை வரலாறு
என்றும் நேசிக்காது..
அல்லாஹ்வின் புனித
இல்லத்தில் பதவிக்கு
சண்டையிடும்
சகோதரர்களே..
பாவ மன்னிப்பு கேட்டு
மண்டியிடுங்கள்
அல்லாஹ்விடம்..
அவராத்தர் சிராஜ்...
---------------------------------------------
பின் குறிப்பு :
வரும் காலங்களில் தலைவர்
மற்றும் செயலாளரை நேரடி
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க
வழிவகை செய்தால் உட்கட்சி
பூசலை தவிர்க்கலாமே.
அரசியல் சாசன சட்டத்தையே
திருத்தும்போது,முத்தவல்லி
கமிட்டியின் By Law வை
பொதுக்குழு & நிர்வாகக்
குழுவைக் கூட்டி மாற்றுவதில்
என்ன பிரச்சனை வந்து
விடப்போகிறது..
அப்படி செய்வது சாத்தியம்
எனில்,வருங்காலங்களில்
இன்று நாம் காண்கின்ற
பிரச்சனைகள் தவிர்க்கப்
படலாம்..

