Wednesday, 20 July 2022

நமது கூத்தாநல்லூர் பெரிய பள்ளி நிர்வாக தேர்தலின் வேட்புமனு தாக்கல் முடிவுற்று தேர்தலுக்கு காத்திருக்கும் தருணத்தில் எழுந்த சிந்தனை..


ஆசைக்கும்,பெயருக்கும்,பெரும்
புகழுக்கும் மட்டுமே பதவியை
நாடி வருவோரே..ஓரமாய்,
கொஞ்சம்  தூரமாய் நின்று,
நல்லோருக்கு வழிவிடுங்கள்...

வேட்புமனு முடிவுற்ற நாளன்று
இளமையும்,அனுபவமும் ஒருசேர
கைக்கோர்த்த ,பள்ளி பொறுப்பில்
உள்ளோரின் பட்டியல் கண்டேன்..

வெறுப்பில் உள்ளோர்,பட்டித்
தொட்டியெல்லாம் கிழித்த,அந்த
பட்டியலை கண்ணுற்றால்,பழமை
புதுமையின் கலவை புரியும்..

பழையன கழிதல்,புதியன புகுதல்
என்பது-மாற்றத்திற்கும்,புதிய
ஏற்றத்திற்கும் அவசியமே..அதை
நன்னூல் அன்றே சொன்னது..

பழமை என்பதால்,உடமையை
இழக்க முற்படுவது,புதுமை
செய்யும் தற்கொலை அல்லவா.?
பழமை செய்த தவறை,இளமை

சுட்டிக்காட்டுவது இயல்பு தானே
அதை ஏற்று சீர்செய்வதால்
பழமைக்கு தாழ்மை இல்லையே..

இன்றைய நிலமை அறிந்து
பழமையின் அனுபவம் புரிந்து,
அதன் பெருமை காப்பதும்
புதுமையின் கடமை தானே..

இளமை அழகே..புதுமை அழகே..
அதற்காக,அனுபவம் முதிர்ந்த
பழமையினை தாழ்த்திப்
பேசுவது நாகரீக குறைவே..

பழமையிடம் குறை இருப்பின்
அதை இளமை மறைக்க
வேண்டாம்,நிறை இருப்பின்
அதை குறைக்க வேண்டாம்..

காழ்புணர்ச்சியால்,இல்லாத
ஒன்றை பெரிதாக்கி,பேசும்
பொருளாக்கி, வாகை சூட
குரைக்கவும் வேண்டாம்..

பழமையும் புதுமையும் இரண்டற
கலந்தால்-,நீயா நானா என்பதை
மறந்தால்,வரும் நாளெல்லாம்
திருநாளே..நமக்கு பெருநாளே...

அனுபவ பழமையே..!ஆர்வமிகு
புதுமையே.!நம் ஊருக்கு நீவிர்
கைகோர்த்து செய்திடும்
நிர்வாக திறமையே தேவை...

ஊர் சீர்படவேண்டும், பள்ளி|
நிர்வாகம் செயற்படவேண்டும்..
அனுபவம் உள்ளோரும்
ஆர்வம் கொண்டோரும் வாரும்..

அனுபவமும், ஆர்வமும்
நேர்மையோடு சேர்ந்தால்
தூய்மையான நிர்வாகம்,நம்
பெரிய பள்ளிக்கு வாய்த்திடும்..

வெறும் வாய்ப்புரட்சியால்,வாட்ஸ்
அப் உருவாக்கும் மிரட்சியால்
வென்றிட முனைவோரின்
சொல்லாற்றலை,உண்மையான
செயலாற்றால் வென்றிடுமா?

நம் வாக்காளர்கள் நல்ல ஞானம்
உள்ளவர்கள்.நியாயம் அறிந்து
தீர்ப்பளிப்பார்கள்..வல்லவனின்
அருளால் நல்லதே நடக்கும்..

No comments:

Post a Comment