Monday, 2 May 2022

அன்பிற்கினிய உறவுகளுக்கு, நட்புக்களுக்கு, ஈகைநாளில் என் இதயத்தின் வாழ்த்துகள்

முப்பதையும் முழுதாய் நோற்றிட
எமக்கு மன உறுதி தந்தவனே.!
மூப்பதையும் பாராமல்,உடல்
தளர்ந்து நோற்றவருக்கும்,
உடல் உறுதி தந்தவனே.. 

ஏழைக்கும் பசியுண்டு;
கண்ணீர் விழியுண்டு
என்பதனை,விருந்துண்டு,
கனியுண்டு களித்திடும்,
கோமானும்  அறிந்திட,
அனைவருக்கும் நோன்பை
பொதுவுடமை ஆக்கியவனே.!

புனித மாதத்திலே மறை படித்து,
நாதர் நபி உரை படித்து,அழுது,
தொழுது,மனதை உழுது,
ஈகைப் பெருநாளை
எட்டிவிட்டோம் உன்னருளால்..

பெருநாள் காலை,புத்தாடை
பூண்டு,உறவுகளோடு  'நா' மகிழ
பசியாறி,களிப்புற்ற வேளையில்,
சென்றுவிட்ட ரமலானை எண்ணி,
நெஞ்சம் கலங்குதே யாஅல்லாஹ்..

இம்மையில் அறமோடு வாழ,
மறுமையில் உன் அரணோடு
வாழ,எமக்குதவிடும் ரமலானை,
மீண்டும் சந்திக்க விழைகின்றோம்.
வாய்ப்பை தந்திடு யா அல்லாஹ்..

தரணியெங்கும் மானுடம்
செழிக்கவும்,நல்லிணக்கம்
சிறக்கவும்,ஈகை நாளில்,
உன்னிடம் வேண்டுகிறோம்.
அருள்புரிவாய் யா அல்லாஹ்..!
🤲🤲🤲🤲🤲

No comments:

Post a Comment