Saturday, 4 September 2021

என்னை வாழ்த்திய உறவுகள்

என்னை வாழ்த்திய உறவுகள்
அன்பு சகோதரர்கள்,நட்புக்கள் அனைவருக்கும் எனது
நெஞ்சார்ந்த நன்றிகள்...

அகவை அறுபது எனக்கு..

***********

அகவை அறுபது நிறைவானது...
மீதி எத்தனை ஆண்டுகளோ?..
அக்கணக்கோ மறைவானது..
இனி வரும் நாட்களோ குறைவானது...
என் மனதில் அது பதிவானது...
நிச்சயம் அது மிக தெளிவானது..  

நான் கடந்த பல நாட்கள்
சுவையானது,சில நாட்கள்
சுமையானது..என்னை கடந்த
சில நாட்கள் விஷமானது..
பல நாட்கள் என் வசமானது..

படைத்தவனின் அன்பானது,அது 
நம் மீது பொழியும் அருளானது..
கொடுப்பது அவன் குணமானது,
கருணையே அவன் மாண்பானது..
அவன் தரப்போகும் எஞ்சிய
என் நாட்களெல்லாம் அவனானது..

இறந்து போன நாட்களில்
திண்ணமாய் தவறுகள் பல 
செய்திருப்பேன்.எலும்பில்லா
நாக்கினால்,சுடு சொல்லும்
பேசிருப்பேன்..சுட்ட வடு ஆறாத
நட்புக்களும்,உறவுகளும்,எனை
மன்னித்திட வேண்டுகிறேன்..

ஈன்றெடுத்த தாயும்,பயிற்று
வித்த தந்தையும்,மண்ணில்
கரைந்து,விண்ணில் உயர்ந்தாலும்,
என்னில்,என் கண்ணில் நிலைத்து நின்று,
எனை வழி நடத்துபவர்கள்..

உயிர் தந்தவர்களுக்கு எனது
உயிரையே தர காத்திருந்தேன்..
விளையும் பயிர் நீ,பத்திரமாய்
இருந்து,பவித்தரமாய்  வாழு
என்று சொல்லி சென்றுவிட்டனர்..

நீரின்றி உலகில்லை, நீங்கள்
இன்றி நானில்லை..அம்மாவிற்கும்,
அத்தாவிற்கும் நன்றி..நன்றி...

அறுபதை தந்தவனே..ஆற்றல்
மிகு வல்லவனே..அல்லாஹ்வே..
நன்றி!..நன்றி..மிஞ்சிய நாட்கள்
எத்தனையோ?அத்தனைக்கும்
நன்றி.!இனி வரும் எஞ்சிய என்

நாட்கள்,இனிமையானதாய்
உன் அருள் பெற்றதாய்
அமைந்திட வல்ல ரஹ்மானே
நீ அருள்புரிவாயாக.!

No comments:

Post a Comment