விண்ணை நோக்கி சென்னை
தன்னை சார்ந்தவர் செழிக்க
மழை கேட்ட காலம் போய்,இன்று
தன் முகம் சுழிக்க, ஈரக்கண்ணை
காட்டி ,வருணனை வர வேண்டாம்
என பிரார்த்திக்கும் நிலை!!
அரசியல் அடிவருடிகள் மற்றும்
கறுப்புப் பண முதலைகளால்
நடத்தப்படும் கல்லூரிகளும்,
ஐட்டி நிறுவனங்களும்,பன்னாட்டு
குழுமங்களும் ,நம் நீர் நிலை
ஆதாரங்களை ,காங்க்ரீட்
தோட்டங்களாக்கி ,மழை நீர்
வாட்டங்களை அடைத்து
நீரின் ஓட்டங்களை திசை
திருப்பியதால் அதன்
சீற்றங்களுக்கு ஆளானோம்!!
சென்னையை பெருநகராய்
வளர்ப்போம் என சொல்லி
நீர் நிலைகளை வளைத்தோம்!!
கட்டிட கலைகளால் ஆற்று
படுகைகளை அறியாமையால்
அழித்தோம்!! விவசாயத்தை
பழித்தோம் !!இன்று வருணனின்
கோபத்தால் கண் விழித்தோம்!!
கூவத்தின் கோபத்தால்,
அடை ஆற்றின் சாபத்தால்
சென்னை வெள்ளக்காடானது
நம் நிலை வெட்க கேடானது!!
பொருள் உள்ளவன் கோடிகளில்
இல்லத்தை அமைத்தான்..இன்றோ
மொட்டை மாடிகளில் தஞ்சமானான்.
இல்லாதவன் கல்வி கல்லாதவன்
பள்ளியில் தஞ்சமானான்!!
உடையவன் வறியவனுக்கு கொடுத்த
நிலை மாறி, இன்று மாடிகளில்
நின்று ,மிதவைகளில் வரும்
வறியவனிடம் உணவுக்கு
கையேந்தும் நிலையில் பொருள்
உடையவன்..மதங்களும்
மாச்சரியங்களும் கடந்த
ஆச்சரியங்களின் அரங்கேற்றம்!!
ஜாதி மத துவேசத்தால் பிரிவினை
கண்ட நாம் ,சென்னை தந்த
வெள்ளத்தால் தன்னை அறிந்து
உள்ளத்தால் ஒன்றானோம்..
மனிதாபிமானம் தந்த
இந்த நினைப்பும் ,இணைப்பும்
என்றென்றும் நிலைத்திட
இறைவனை பிரார்த்திப்போம்!!
No comments:
Post a Comment