Friday, 27 November 2015

அகவை அறுபதை தொட்டவர்கள்!!


அகவை அறுபதை தொட்டவர்கள்,இதயத்தினை 
விழியாய் ஏற்று அதன் வழியாய் பார்த்து,
கனிவாய் கண்ணால் பேசிடுவர்.தன்னால் இயன்றதை 
பின்னால்  வரும் சந்ததிக்கு செய்திடுவர்!!

மணவறையில் அமர்ந்தவளுக்கு வேண்டி
கருவறையில் இடம் தந்தவளுக்கு,வீட்டறையில்
இடம் இல்லையென  துரத்திய தனயனையும்,
வாழ்நாளை அடகு வைத்து உடல் தளர்ச்சியிலும் 
மகன் வளர்ச்சிக்கு தோள்கொடுத்த தகப்பனை 
விரட்டியவனையும்,கனிவாய் பார்த்து அவன் 
நலனுக்கு பிரார்த்திக்கும் அன்பு தெய்வங்கள்
அகவை அறுபதை தொட்டவர்கள்!!

வாலிபத்தில் வாழ்க்கை கணக்கை பதறாமல் 
போட தலையால் சிந்தித்த சிலர்,சுயநலமாய் 
கூட்டி வகுத்து வரவுக்காக உறவையும் நட்பையும் 
கழித்து அவர்தம் அன்பை இழந்திடுவர்!! உறவுகள்,
நட்புக்களின் பிணக்கை உதிராமல்,
சிதறாமல் இணைக்க இதயத்தால் சிந்திக்கும்,
அன்பான என் வயதை ஒத்தவரே!!இப்பதிவை 
உமக்கு சமர்பிக்கின்றேன்!!

சொல்லாமலே நாட்கள் பறக்கின்றது,
எண்ணாமலே வயதும் ஏறுகின்றது.கேட்காமலே 
தலையும் நரைக்கின்றது.பொருள் தேடலின் 
ஓட்டத்தில் மூச்சிரைக்கின்றது.எத்தனை 
ஆண்டுகள் சொச்சம் உள்ளதோ வாழ்வில்? 
மிச்சம் உள்ள தினங்களை,அச்சம் இன்றி 
அனுதினமும் சுவைத்திடுவோம்! 
காலம் நமக்கு தந்த அனுபவத்தை 
வரும் சந்ததியினருக்கு கடத்திடுவோம்!!
ஆதரவாய் அறப்பணிகள் செய்துடுவோம்!!

நாற்பதை கடந்தவனுக்கு நாய் 
குணமாம்!! சொன்னவன்
சரியாக தானே சொன்னான்.
வீட்டிற்கும் அது வாழும் தெருவிற்கும் 
காவலானாய் நன்றி காட்டும்  ஜீவன் நாய்!!
நாமும் வாழ்க்கை பயணத்தில்
நமக்கு உறுதுணையாய் இருந்த உறவுக்கும்,
நட்புக்கும் உள்ளத்து நன்றியை ஒளிமறைவின்றி 
காட்டிடுவோம்!!
மனிதத்தை காத்திடுவோம்!!

  
உச்சியில் இருக்கும் சூரியனின் வறுத்தெடுக்கும் 
வெப்பக்கனலை வெறுத்தவர்களும்,அதன் ஒளி
வீச்சை தன் கண்ணால் காண மறுத்தவர்களும்,
அந்தி வானத்திற்கு பொன்னிற கதிர்களோடு 
கனிவாய்,குளிர்ச்சியாய் அது சரியும் போது
பின்னால் ஓடி அதன் அஸ்தமனத்தை காண
துடிப்பார்கள் ..

நாமும் மாலை நேர சூரியனை போல,தன்னை  
முன்னிறுத்தி தன்முனைப்பு காட்டும் 
வாலிபத்தை இழந்து,அந்திமத்தை நோக்கி 
சரிந்து போனோம்.முந்தி இருந்த நிலை மாறி,
உடை மாறி,உருமாறி போனோம்.
கோப தாபங்களை துறந்து,போட்டி 
பொறாமைகளை மறந்து கனிந்து போனோம்
மனம் பண்பட்டதால் எல்லோரிடமும் 
தணிந்து போனோம்.இறப்புக்கு துணிந்து 
போனோம்.மாலை நேர சூரியனாய் நாம் 
மாறி போனதால் நமது அஸ்தமனத்திற்கு
உறவுகளும் நட்புக்களும் திரண்டு 
வழியனுப்ப வருவார்கள் என நம்புவோம்!!

No comments:

Post a Comment