Sunday, 22 November 2015

அந்நிய மண்ணில் இருந்து பெருநாள் வாழ்த்துக்கள் !!

தாய் மண்ணில் என் திருநாட்டில்
ஈகை திரு நாளில் உவகையாய்
புத்தாடை பூண்டு நறுமணம் கமள
தக்பீர் முழங்க பள்ளிக்கு செல்லும்
அன்பர்களையும் நண்பர்களையும்
என் சொந்தங்களையும்
காண துடிக்கிறது என் மனம்
நான் இருப்பதோ அன்னிய மண்ணில்
இல்லத்தினை அழகாக்கி தன்
உள்ளத்தினை கனிவாக்கி, அமுதமாய்
அறுசுவையாய் உணவாக்கி
பெருநாளை திருநாளாய் உருவாக்கி
நம் எல்லோரையும் எழுச்சியாய்
இந்நன்னாளை கொண்டாடிட
உறுதுணையாய் இருக்கும்
தாய்களையும் சகோதரிகளையும்
போற்றிபுகழ்ந்திட ஆசை ,நான்
இருப்பதோ அன்னியமண்ணில்
சொந்தங்களின் பெருமை
நட்புகளின் இனிமை
கோபுரத்தின் அருமை
தூரத்தில் இருப்பவனுக்கு
தான் தெரியும் .....
என் சொந்தங்களே !!என் நட்புகளே!!
மகிழ்ச்சியாய் எழுச்சியாய்
சுற்றம் சூழ பேதங்களை
மறந்து ஒற்றுமையாய்
இப்பெருநாளை கொண்டாடிட
வாழ்த்துகிறேன் !!! நீங்கள்
எல்லோரும் வளமாய் நலமாய்
வாழ்ந்திட எல்லாம் வல்ல அந்த
ரப்புல் ஆலமினிடம் வேண்டுகிறேன்



No comments:

Post a Comment