Friday, 2 October 2020

போர்பந்தர்..போரை வெறுத்த சமாதான விரும்பி,..நீ பிறந்த 
ஊரின் பெயரிலேயே போரா..?
வன்முறை,..அது உன்முறை 
அல்லவே..பள்ளியில் படித்த
போது கேட்கத்தோணியது..

நீ உதித்த இந்த நாளில்,நீ பதித்த
தடங்களை பற்றி பேசலாம் 
என்று நினைத்தேன்..ஆனால் 
உனை சாய்த்த நிகழ்வே எம் மனக்கண்ணில் வருகிறது..

அறத்தால்,தன் மன உரத்தால்
சுதந்திரத்தை பெற்று தந்த 
அறையாடை கிழவனை,அவர் 
அருமை பெருமையை உணராது
புரையோடிய கொள்கை 
சுரத்தால் பாதிக்கப்பட்டவன் 
நிலத்தில் சாய்த்துவிட்டான்..

சமாதானத்தை விரும்பியவனை
சனாதனத்தை விரும்பியவன்
சாய்த்த நிகழ்வு..அது மாபெரும்
சரித்திர பிறழ்வு என்பதை 
அறியாத தரித்திரங்கள்,உன் சரித்திரத்தையே மாற்றிட 

முனைவதை கண்டால் நீர் 
என்ன சொல்வீரோ.??
மேலாடை இல்லாமல் காட்டையும்
கழனியையும் திருத்துபவன் நிலை 
கண்டு,வருந்தி,நூலாடை பூண்டிட
உன் கோட்டையே கழற்றிய நீ,   
கோட்டையை பிடித்திட,நாட்டையே தாரை  வார்க்கும் கூட்டத்தை 

கண்டால் என்ன சொல்வீரோ?. 
சாட்டை சுழற்றிய வெள்ளை
பரங்கியர்  படையிடம் இருந்து 
நாட்டை காத்தவரே, மதத்தால் 
நாட்டை பிரிக்க விரும்பாத 
நீர்,இன்று மதத்தால் வோட்டை 
பிரிக்கும் சொல் வீரர்களை 
கண்டால் என்ன சொல்வீரோ... 
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் இல்லை. நீ தடியோடு 

தண்டிக்கு தான் சென்றாய்...
இன்று கட்சி கொடிகளோடு
தண்டிக்க செல்வோரை கண்டால் 
என்ன சொல்வீரோ...?? 
காந்தியமும் கண்ணியமும் 
கண்ணிமையும் கண்களும் 
போல சேர்ந்தே இருக்கும்.. 
அதன் தாக்கம் வர்க்க  
உணர்வோடு தர்க்கம் 
செய்வோரை முழுதாய்
திருத்தும் என்பீரோ..


எண்ணில் அடங்கா உன் சரித்திர 
சாதனைகளை மறந்தவர்கள், 
ரூபாய் நோட்டின் எண்ணில்  
உன்னை அடைத்தால் போதும் 
என்று நினைத்து விட்டனர்.. 
உன்னை அடைத்தால்,சிறையில் 
அடைத்தால்,வீறுகொண்டு நீ 
எழுவாய் என்று ஆங்கிலேயருக்கு 
அன்று தெரிந்தது,வீர சாவர்கரின் 
வழி தோன்றல்களுக்கு இன்று 
தெரியவில்லையோ??


வன்முறை வேண்டாமென்று 
நன்முறையை சொல்லி தந்த 
நீ,உன் முறையே சிறப்பென்று  
கைதடிகளுக்கு உரக்க சொல்லிட 
உன் கைதடியோடு மீண்டும் நீ 
பிறந்திட வேண்டுகிறோம்.. 


No comments:

Post a Comment